தலம் : வெண்காடு
சுவாமி : திருவெண்காட்டீசர்; அம்பாள் : பிரமவித்யாநாயகி.
பாடல் எண் : 1
கண்காட்டும் நுதலானும் கனல்
காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும்
பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்
காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடை
காட்டும் கொடியானே.
பாடல் எண் : 2
பேய் அடையா பிரிவெய்தும்
பிள்ளையினோடு உள்ளம் நினைவு
ஆயினவே வரம்பெறுவர் ஐயுற
வேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு
முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத்
தோயாவாம் தீவினையே.
பாடல் எண் : 3
மண்ணொடு நீர் அனல் காலோடு
ஆகாயம் மதி ரவி
எண்ணில்வரும் இயமானன் இக
பரமும் எண்டிசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு
சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடு
இடமா விரும்பினனே.
பாடல் எண் : 4
விடமுண்ட மிடற்று அண்ணல்
வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக்
குருகு என்று
தடமண்டு துறைக்கெண்டை
தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகை
காட்டும் காட்சியதே.
பாடல் எண் : 5
வேலைமலி தண்கானல் வெண்
காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடு
நல் மறையவன் தன்
மேல் அடர்வெங் காலன் உயிர் விண்ட
பினை நமன் தூதர்
ஆலமிடற் றான் அடியா ரென்று
அடர அஞ்சுவரே.
பாடல் எண் : 6
தண்மதியும் வெய்யரவும் தாங்கினான்
சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர்
கூறுகந்தா னுறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பல
ஓதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணை மேல்
வீற்றிருக்கும் வெண்காடே.
பாடல் எண் : 7
சக்கரமாற்கு ஈந்தானும்
சலந்தரனைப் பிளந்தானும்
அக்கு அரைமேல் அசைத்தானும்
அடைந்து அயிரா வதம்பணிய
மிக்க அதனுக் கருள்சுரக்கும்
வெண்காடும் வினை துரக்கும்
முக்குளம் நன்கு உடையானும்
முக்கண் உடை யிறையவனே.
பாடல் எண் : 8
பண்மொய்த்த இன்மொழியாள்
பயம் எய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று
அருள்செய்தா னுறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை
நடமாடக் கடல் முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண்டு
இசைமுரலும் வெண்காடே.
பாடல் எண் : 9
கள்ளார் செங் கமலத்தான்
கடற்கிடந்தான் என இவர்கள்
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி உயர்ந்து
ஆழ்ந்து உணர்வு அரியான்
வெள்ளானை தவஞ்செய்யு மேதகு
வெண் காட்டான் என்று
உள்ளாடி உருகாதார்
உணர்வுடைமை உணரோமே.
பாடல் எண் : 10
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு
மொழி பொருள் என்னும்
பேதையர்கள் அவர் பிறிமின்
அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர்
வியன் திருவெண் காட்டான் என்று
ஓதியவர் யாதுமொரு தீது இலர்
என்று உணருமினே.
பாடல் எண் : 11
தண் பொழில்சூழ் சண்பையர்கோன்
தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி
விகிர்தன் உறைவெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை
பாடியபத்து இவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய்
வான் பொலியப் புகுவாரே.