தலம் : திருச்சிராப்பள்ளி
சுவாமி : மாத்ருபூதேஸ்வரர்; அம்பாள் : மட்டுவார்குழலி.
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே. 1.98.1
கைம்மகஏந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்
செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே. 1.98.2
மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே. 1.98.3
துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்
சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்
கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
பிறைமல்குசென்னி யுடையவன்எங்கள் பெருமானே. 1.98.4
கொலைவரையாத கொள்கையர்தங்கள் மதில்மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்
நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே. 1.98.5
வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது
செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே. 1.98.6
வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர்கோயிற் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே. 1.98.7
மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்
தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்
சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்
சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே. 1.98.8
அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக்
கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீரும்மை யேதிலர்கண்டால் இகழாரே. 1.98.9
நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை
ஊணாப்பகலுண் டோதுவோர்கள் உரைக்குஞ்சொல்
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே. 1.98.10
தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல்சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன்
ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார்
வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே. 1.98.11
திருச்சிற்றம்பலம்.